கபாலி… சிறப்புக் காட்சி பார்த்தவர்கள் சிலிர்ப்பு!

Tags: Tamil Cinema News

admin

கபாலி படத்தின் சிறப்புக் காட்சியை முதல் முதலில் பார்க்கும் வாய்ப்பு அமெரிக்காவில் உள்ள சிலருக்குக் கிடைத்துள்ளது. காரணம் படத்தின் நாயகன் ரஜினிகாந்த்.

ரஜினிக்காக போடப்பட்ட இந்த அமெரிக்க சிறப்புக் காட்சிதான் உலகில் அதிகாரப்பூர்வமாக திரையிடப்பட்ட கபாலியின் முதல் காட்சி. இந்தக் காட்சியில் ரஜினியுடன் 30-க்கும் மேற்பட்டோர் படம் பார்த்தனர்.

படம் பார்த்த அத்தனைப் பேரும், கபாலி பிரமாதமாக வந்துள்ளதாகப் பாராட்டுத் தெரிவித்தனர். ரஜினி கபாலியாக அறிமுகமாகும் காட்சி, தியேட்டரை அதிரவைக்கும் என்பதே அத்தனைப் பேரின் கருத்தாகவும் உள்ளது.
கபாலி படம் முழுக்க ரஜினியின் வீச்சை உணர முடிவதாகவும், ரஜினிக்குப் பொருத்தமான கதையைத் தேர்வு செய்த இயக்குநர் ரஞ்சித், அவரை மிக அருமையாக பயன்படுத்தியுள்ளதாகவும் படம் பார்த்த பலரும் பாராட்டியுள்ளனர்.

குறிப்பாக க்ளைமாக்ஸ்தான் படத்துக்கு ஜீவன் என்று பெரும்பாலானோர் குறிப்பிட்டுள்ளனர்.
ரஜினியின் கேரியரில் பாட்ஷா, படையப்பா, சிவாஜி, எந்திரனை விட மிகப் பெரிய வெற்றியை கபாலி படைக்கும். ஒவ்வொரு காட்சியும் அப்படி ஒரு மாஸாக உள்ளது என ஒரு பெண் பார்வையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வயதிலும் இத்தனை ஆக்ரோஷமாக ஆக்ஷன் காட்சிகளில் ரஜினியால் எப்படி நடிக்க முடிந்தது என வியப்புத் தெரிவித்துள்ளார் ஒரு ரசிகர்.

ப்ளாஷ்பேக் காட்சியில் வரும் இளம் ரஜினி நிச்சயம் ரஜினி ரசிகர்களைப் பரவசப்படுத்துவார் என்று சிலர் கூறியுள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவு இன்னொரு சிறப்பம்சம் என்றும், மலேசிய லொகேஷன்கள் படத்துக்கு தனி வண்ணத்தைத் தந்துள்ளதாகவும், பாடல்களில் நெருப்புடா… பார்ப்பவரை தீயாகப் பற்றிக் கொள்வதாகவும் பாராட்டியுள்ளனர்.
மொத்தத்தில் கபாலி படம் பார்த்த பலரும் கொண்டாடியுள்ளனர்….

மகிழ்ச்சி